எங்ககிட்ட இருந்து 'தள்ளி' இருங்க... இல்லனா 'அவ்ளோ' தான்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்எங்கள் போர்க்கப்பல்களிடம் இருந்து தள்ளி இருங்கள் என ஈரானுக்கு, அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு நடுவிலும் அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை ஓய்வதாக இல்லை. நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வளைகுடா கடற்பகுதியில் 11 போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படைகளுக்கு அருகில் வந்தது. இதையடுத்து அவர்களை கடலிலேயே சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதிபரின் இந்த பேச்சுக்கு ஈரானிய நாடும் தக்க பதிலடி கொடுத்து இருந்தது.
எனினும் அமெரிக்க அரசின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் போர்க்கப்பல்கள் வளைகுடா பகுதியில் தனது வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரானிய அதிகாரி ஒருவர், '' கடந்த காலங்களைப் போல சர்வதேச கடற்படை விதிகளுக்கு உட்பட்டு ஈரான் வளைகுடா பகுதியில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது,'' என தெரிவித்து உள்ளார்.
ஆனால் அமெரிக்கா இதை சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதுகுறித்து அமெரிக்கா, அமெரிக்க போர்க்கப்பல்களிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா சர்வதேச பொருளாதார தடை விதித்ததில் இருந்து இரு நாடுகளும் அவ்வப்போது முட்டி மோதிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.