'வடகொரியாவில்' நடக்கும் விரும்பத்தகாத 'விஷயங்கள்...' 'அதிகரிக்கும் சந்தேகம்...' "கிம்மின் நிலை என்ன?" "அடுத்து அங்கு நடக்கப் போவது என்ன?..."
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் முன்னாள் அதிபர்களான கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டிருப்பது கிம் ஜாங் உன் குறித்த சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அதிகாரத்தின் மீதான தன் பிடியை கிம் இறுக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை என்றழைக்கபடும் கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. இதையடுத்து பொதுவெளியில் வராத கிம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. வெளியுலகின் பார்வையில் படாத நிலையில் அவர் இறந்து விட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் கோமாவில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின.
இதையடுத்து, கடந்த மே ஒன்றாம் தேதியன்று தலைநகர் பியாங்யாங் அருகில் நடைபெற்ற உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம். ஆனால் , அது உண்மையான கிம் ஜாங் உன் இல்லையென்றும், அவரைப் போலவே தோற்றம் கொண்ட வேறொருவர் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் கிம் இல் சங் மற்றும் கிம் ஜாங் இல் ஆகியோரது உருவப்படங்கள் திடீரென அகற்றப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு கிம்மின் படத்தை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஊகங்கள் வலம் வருகின்றன.
கடந்த திங்களன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தின் படி, கிம் இல் சங் சதுக்கத்தில் உயர் அதிகாரிகள் அமர்ந்து ராணுவ அணிவகுப்பை பார்வையிடும் மாடம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், தென்கொரிய ஊடகம் கிம் இல் சங் சதுக்கத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ஒரு புறம் கிம்மின் இருப்பு பற்றிய சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரத்தின் மீதான தன் பிடியை கிம் இறுக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
