'உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய சீனா...' 'விசாரணையில்' வெளியான 'அதிர்ச்சித் தகவல்...' 'அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிக்கை...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவலை, சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க விடாமல், உலக சுகாதார அமைப்பை சீனா மிரட்டியது என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ., அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா முதலில் சாதாரண ஒரு தொற்று நோயாகவே உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. ஆனால் சீனாவில் அந்த வைரஸ் வேகமாக பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த தகவல்கள் முழுமையாக மற்ற நாடுகளுக்கு பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சீனா மீது உள்ளது. வைரஸ் பரவலின் வேகத்தையும் அதன் பாதிப்புகளையும் முழுமையாக அறிந்த சீனா அதனை வெளி உலகுக்கு அறிவிக்காமல் மறைத்து விட்டதாகவே பல நாடுகளும் கருதுகின்றன. இதுகுறித்து பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா இவ்விவகாரத்தில் சீனாவையும், உலக சுகாதார அமைப்பையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனா நோய்த் தொற்று குறித்து ஆரம்பத்திலேயே உரிய எச்சரிக்கையை விடுக்கவில்லை என்றும், இந்த வைரஸ் வுகான் லேப்பிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அடிபணிந்து நடப்பதாகவும், சீனாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டு குற்றம் சாட்டி வந்தது.
இதனால் இந்த விவகாரத்தில் சீனா என்ன தவறு செய்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது. கொரோனா குறித்த உண்மைத் தகவல்களை கண்டறிய தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா குறித்து விசாரணை நடத்திய அமெரிக்கா உளவு அமைப்பான சி.ஐ.ஏ., விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், 'கொரோனா வைரசை, சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா கடுமையான நெருக்கடி கொடுத்தது. அப்படி அறிவித்தால், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வரும் ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்தி விடுவோம் என மிரட்டியது' எனக்கூறப்பட்டுள்ளது.