'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 13, 2020 05:12 PM

அமெரிக்காவில் கொரோனா தாண்டவம் ஆடும் நிலையில், அங்கு வேலை பறிபோன இந்தியர்கள் தற்போது சொந்த நாட்டிற்குத் திரும்பி வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அதன் அதிர்ச்சி பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

H-1B visa suspension prevents Indians in US from flying back home

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் ஆட்டம் தற்போது அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. அங்குப் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எச்-1பி விசா பெற்று வேலை செய்து வந்த இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலர் வேலையிழந்துள்ளார்கள்.

வேலை பறிபோன இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு வேலை பறிபோனது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள விதிப்படி, ''எச்-1பி விசா பெற்று அங்கு வேலை பார்த்து வரும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், 2 மாத காலத்திற்குள் புதிய வேலையைத் தேடி விட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அவர்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விட வேண்டும்''.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைப்பது என்பது சாத்தியமற்றது. இதனால் 2 மாத கெடுவை 6 மாதங்களாக உயர்த்த வேண்டும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு மனு அளிக்கும் இயக்கம் ஒன்றைப் பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கியுள்ளார்கள்.

இதற்கிடையே உலகளவில் விமானச் சேவை முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் சார்பில் பல நாடுகளுக்கு வந்தோபாரத் மிஷன் என்ற திட்டத்தின்கீழ் ஏர் இந்திய விமானங்களை அனுப்பி அங்குச் சிக்கித் தவிக்கிற இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா சென்ற விமானத்தில், அங்கு வேலை இழந்து தவிக்கும் சில இந்தியர்களால் தாய் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நெவார்க் விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் தாய் நாட்டிற்குத் திரும்ப இந்தியத் தம்பதி ஒன்று தங்களது இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்தது. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம் டிக்கெட் வழங்க மறுத்து விட்டது. இந்தியரான அந்த தம்பதிக்கு இந்திய விசா கூட இருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் அவர்களது 2 குழந்தைகளும் அமெரிக்கர்கள். இதற்குப் பின்னணியில் சமீபத்தில் இந்திய அரசு பிறப்பித்த விதி தான், முக்கிய காரணம் என அந்த தம்பதி கூறியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் விசாக்கள், விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அட்டை (ஓ.சி.ஐ. அட்டை), கொரோனா வைரஸ் காரணமாகச் சர்வதேச அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என இந்திய அரசு கடந்த மாதம் ஒரு ஒழுங்குமுறையைப் பிறப்பித்து அதைக் கடந்த வாரம் புதுப்பித்துள்ளது.

இது தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப பெரும் தடைச்சுவராக அமைந்துள்ளது. இந்த விதியை மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதேபோன்று மம்தா என்ற இந்தியப் பெண்ணிற்கும் இதே நிலை நேரிட்டுள்ளது. அந்த பெண்ணுக்குப் பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. மம்தா இந்தியர் என்பதால் அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது குழந்தை அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் பாஸ்போர்ட்தான் உள்ளது. இதனால் அந்தப் பெண் தன் குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் போய் உள்ளது. 

இதுகுறித்து அந்த பெண் கூறும்போது, இனியும் எங்களால் அமெரிக்காவில் இருக்க முடியாது. எங்களைத் தாய் நாட்டிற்குத் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும். எனக்கு இங்கு உதவிக்குக் கூட யாரும் இல்லை என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் 'வந்தோபாரத் மிஷன்' என்பது மனிதாபிமானமான திட்டம். ஆனால் இது மனிதாபிமானமற்ற திட்டமாக ஆகி விட்டது என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையே நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் பலரும், அரசு இது தொடர்பான விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வேதனையுடன் கூறியுள்ளார்கள். இல்லையென்றால் வேலையும் பறிபோன எங்களது நிலைமை இன்னும் மோசமாகி விடும் என, கதறியுள்ளார்கள்.