டைம் குடுத்து 'ஆப்பு' வைக்குறவங்களா நீங்க?... அசராமல் 'திருப்பி' அடித்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவையும் அதிகம் பாதித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்ட ஆரம்பித்தது முதல் கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடான சீனாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் சீனாவிற்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி அவர்களுக்கு நிதி வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'அடுத்த நாட்களில் சீனாவிடம் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்து காட்ட வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு நிதி வழங்குவதை மொத்தமாக நிறுத்தி விடுவோம். அதே போல உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராகவும் தொடர மாட்டோம்' என குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை இந்த கடிதம் ஏற்படுத்திய நிலையில் சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில் 'உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதம் தெளிவற்ற வெளிப்பாடுகளால் நிரம்பியுள்ளது. சீனா மீது அவதூறு பரப்பவே இது போன்ற முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடுகிறது. அமெரிக்காவில் கொரோனாவை கட்டிற்குள் கொண்டு வராமல் திறமையில்லாமல் செயல்பட்டு கொண்டு சீனாவை குறை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு உரிய பங்களிப்புகளை சரியான நேரத்தில் செலுத்துவது என்பது உறுப்பு நாடுகளின் கடமை ஆகும். இதை வைத்து பேரம் பேசக்கூடாது. அப்படிப்பட்ட சூழலில், உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவேன் என்று ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அதன் சர்வதேசக்கடமையை அமெரிக்கா மீறுவது ஆகும்' என தெரிவித்துள்ளார்.