'காணாமல் போன கணவன்'...'மகன், மகளுடன் சேர்ந்து'...'வீட்டுக்குள் சவக்குழி தோண்டிய தாய்'...பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 04, 2019 04:07 PM

காணாமல் போனதாக சொல்லப்பட்ட கணவனை, மனைவி தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife killed husband and the family helped her to dispose the body

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு பிச்சையம்மாள், என்ற மனைவியும் சுரேஷ் என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுப்புராஜின் சகோதரர்கள் அவரை காண வந்தனர். ஆனால் அவர் வேலை தேடி கேரளாவுக்கு சென்று விட்டதாக சுப்புராஜின் மனைவியும், அவர்களின் அண்ணியுமான பிச்சையம்மாள் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், சுப்புராஜ் தீபாவளிக்கு வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தீபாவளிக்கும் அவர் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதோடு சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி மூடப்பட்டு இருப்பது போன்ற தடயம் இருந்ததும் அவர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்த சுப்புராஜின் சகோதரர், மாயமான தனது சகோதரர் சுப்புராஜ் குறித்து பலமுறை தனது அண்ணி பிச்சையம்மாளிடம் கேட்டும் முறையாக பதில் கிடைக்கவில்லை என தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வெளியே கழிவறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அந்த இடத்தை தொடர்ந்து தோண்டும் போது, சுமார் 3 அடி ஆழத்தில் பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன. இதனைத்தொடர்ந்து சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சுப்புராஜ் மயமானது குறித்த மர்மம் விலகியது.

சம்பவம் நடந்த அன்று பிச்சையம்மாள், மாமியார் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்திருந்த அவரது மகள் பிரியா, மகனுடன் இருந்துள்ளார். அப்போது சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பிச்சையம்மாள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்புராஜை தள்ளிவிட்டபோது அவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மயக்கமடைந்த நிலையில், சுப்புராஜ் இறந்து விட்டதாக பிச்சையம்மாள் உட்பட அவரது மகனும், மகளும் பதறியுள்ளனர். இதனிடையே வெளியில் தெரிந்தால் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில், அவசர,அவசரமாக வீட்டின் கழிவறை அருகே குழிதோண்டி சுப்புராஜின் உடலை புதைத்துள்ளனர். இதையடுத்து சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள், மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே சுப்புராஜ் மயக்கமடைந்த நிலையில், அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்ற வேகத்தில் வீட்டுக்குள் சவக்குழி தோண்டி சுப்புராஜை புதைத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பமே சேர்ந்து குடும்ப தலைவரை கொலை செய்து அவரது உடலை வீட்டிற்குள் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #POLICE #VIRUDHUNAGAR #HUSBAND #WIFE