‘மின்னல் வேகத்தில் பறந்த பைக்’.. ‘மடக்கிய போலீசார்’.. கூலாக இளைஞர் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 03, 2019 07:50 PM

பைக்கில் வேகமாக வந்த இளைஞரை மறித்து கேட்டபோது ‘பெற்றோரை கொன்றுவிட்டேன்’ என கூறி போலீசாரை மிரள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy youth killed his parents for family issue

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-பாப்பாத்தி தம்பதி. இதில் ஆறுமுகம் திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகவும், பாப்பாத்தி பெட்ரோல் பங்கிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணுடன் பிரகாஷுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குபின் மாமியார் மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனைவி வெண்ணிலாவை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு நேற்று அதிகாலை பிரகாஷ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் பாப்பாத்தியை எழுப்பி இனி வீட்டில் தகராறு செய்ய ஆளில்லை என கோபமாக கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் உடற்பயிற்சி செய்யும் கருவியால் தாயை அடிக்கப் பாய்ந்துள்ளார். உடனே பாப்பாத்தி பாத்ரூமில் பதுங்கியுள்ளார்.

அந்த சமயம் தடுக்க வந்த தந்தை ஆறுமுகத்துக்கு அடி விழுந்துள்ளது. இதில் ரத்தில் வெள்ளத்தில் அவர் சரிய, உடனே பாத்ரூமில் இருந்து பதறி அடித்துக்கொண்டு பாப்பாத்தி வெளியே வந்துள்ளார். அப்போது தாய் பாப்பாத்தியையும் பிரகாஷ் அடித்துள்ளார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். உடனே பைக்கை எடுத்துக்கொண்டு பிரகாஷ் வேகமாக வெளியே சென்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதில் பாப்பாத்தி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாலையில் பைக் ஒன்று வேகமாக செல்வதை ரோந்துப் பணியில் இருந்த போலீசார் பார்த்துள்ளனர். உடனே வேகமாக சென்று பைக்கை மறித்து விசாரிக்கையில் அது பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ‘பெற்றோரை கொலை செய்துவிட்டேன்’ என கூலாக சொல்லி போலீசாரை அதிர வைத்துள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தாயுக்கும் மனைவிக்குமான தகராறின் காரணமாக கடந்த 15 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு தாய், தந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News & Photos Credits: Vikatan

Tags : #CRIME #MURDER #POLICE #TRICHY #SON #MOTHER #FATHER #WIFE