‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 31, 2019 12:22 PM
இரண்டாவது திருமணத்திற்கு ஆசைப்பட்டு காதல் மனைவியை விவாகரத்து கேட்டு மிரட்டிய கணவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த வெங்கட மகேஸ்வரா ரெட்டி என்பவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த பிரிதுல்லா பாவனா என்ற பெண்ணும் கல்லூரிக்காலம் முதல் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சென்ற ஆண்டு பாவனாவின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் பற்றி தன்னுடைய வீட்டில் பின்னர் கூறுவதாக சொன்ன மகேஸ்வரா, பின்னர் வரதட்சனைக்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பாவானாவிடம் விவாகரத்து கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள பாவனா, “அவர் ஐ.ஏ.எஸ் ஆனால் தான் வீட்டில் எங்களுடைய திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என மகேஸ்வரா கூற, அதற்காக என்னுடைய கனவுகளை உதறிவிட்டு நான் கடினமாக வேலை செய்தேன். ஆனால் அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உன்னை அழைத்துச் சென்றால் என் பெற்றோர் தற்கொலை செய்துகொள்வார்கள் எனக் கூறி என்னிடம் விவாகரத்து கேட்டார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் மகேஸ்வராவுக்கு அவருடைய வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். அவருக்கு நிறைய வரதட்சணை தந்து திருமணம் செய்துகொள்ள பலர் தயாராக இருப்பது தெரிந்துதான் அவர் மனம் மாறியது. விவாகரத்துக்கு நான் சம்மதிக்காததால் என்னுடைய சமூகத்தைக் குறிப்பிட்டு மோசமாக மகேஸ்வரா பேசத்தொடங்கினார்” எனக் கூறியுள்ளார்.
பின்னர் அவர் விவாகரத்து கேட்டு மிரட்டத் தொடங்க, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பாவனாவிற்கு நீதி கிடைக்காமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்திலும், மகேஸ்வரா பயிற்சி பெறும் முசோரி பயிற்சி மையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரால் எந்தப் பலனும் இல்லாமல் போக விரக்தியடைந்த பாவனா தன்னுடைய நிலை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமூகவலைதளத்தில் இந்த விவகாரம் பேசப்பட்டதை அடுத்து தற்போது மகேஸ்வரா மீது ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.