‘வேலை செய்த வீட்டில்’... ‘5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 02, 2019 09:06 PM
வீட்டில் வேலை பார்த்து வந்த பெற்றோரின், 5 வயது மகளை, கொலை செய்து, உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள், உத்தண்டி (35) - ராஜேஷ்வரி (32) தம்பதியினர். இவர்களுக்கு அம்சவல்லி(7), மீனா(5), கனகவள்ளி(3) என்ற 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன், நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த கமலம் (59) என்பவரது வீட்டில், கடந்த 2 ஆண்டுகளாக, குடும்பத்துடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேருக்கும், சாப்பாடு மட்டும் போட்டு, அவர்களது வீட்டுக்கு அருகிலேயே, சிறு கொட்டகை அமைத்து, தங்கவைத்து, கொத்தடிமை போல கமலம் வேலை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த, தனது மூத்த மகளை அழைத்துக்கொண்டு, ராஜேஷ்வரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மற்ற இரு மகள்களும், கமலத்தின் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மதியம் ராஜேஷ்வரியை போனில் அழைத்த கமலத்தின் மகன், உங்களது 2-வது மகள் மீனா, மாடியிலிருந்து, கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அவர்கள் கூறியதை நம்பி கதறித் துடித்த ராஜேஷ்வரியிடம், குழந்தையை தங்களுக்குச் சொந்தமான முந்திரித் தோப்பிலேயே புதைத்துவிடலாம் என்றும் கமலம் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அதன்படி முதனை கிராமத்திலுள்ள முந்திரித்தோப்பில், சிறுமியின் உடல் புதைக்கப்படுவதைப் பார்த்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ராஜேஷ்வரி குடும்பத்தை வெளியே எங்கும் அனுப்பாமல், கமலம் குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கமலம் குடும்பத்தாரிடம் விசாரித்ததில், பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டதால், மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீனா, கமலம் காயவைத்திருந்த நிலக்கடலையை (வேர்கடலையை) மிதித்து விளையாடிக்கிறாள்.
இதில் கோபமடைந்த கமலம், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து மாடி சுவரில் மோதியுள்ளார். அப்போது, கால் இடறி மாடியில் இருந்து விழுந்து குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்துபோன கமலம், அவரது மகன், மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து குழந்தையை கொலை செய்ததை மறைத்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கமலம், அவரது மகள், கமலத்தின் உறவினர் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். தப்பியோடிய கமலத்தின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.