‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு?’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 31, 2019 10:27 AM

இந்த 2 குழந்தைகளைக் கொலை செய்து உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என வாளையார் சிறுமிகள் வழக்கில் அவர்களுடைய தாய் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Kerala Walayar Sisters Rape Death Case Mothers Interview

2017ஆம் ஆண்டு வாளையாரில் இரண்டு சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியது. கேரள மாநிலம் வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி - பாக்கியம். இவர்களுக்கு 2 மகள்கள். 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி இவர்களுடைய மூத்த மகளான 13 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பான போலீஸ் விசாரணையின்போது சம்பவத்தன்று வீட்டில் இருந்து சிலர் முகமூடி அணிந்து சென்றதாக உயிரிழந்த சிறுமியின் 9 வயது தங்கை கூறியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது நடந்து முடிந்த 2 மாதத்திற்குள் சிறுமியின் தங்கையும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட, அவர்கள் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப்பரிசோதனை முடிவில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சிறுமிகளின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்கள் உறவினர் ஒருவர் சிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரைக் கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஒரு மைனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவர் செப்டம்பர் 30ஆம் தேதி விடுவிக்கப்பட்ட நிலையில், ம.மது, வி.மது, ஷிபூ ஆகிய 3 பேர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள சிறுமியின் தாய், “மரணம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் வயதுகூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் எப்படி தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். என்னுடைய மூத்த மகளை அவர்கள் தொந்தரவு செய்ததை என் கணவர் பார்த்துள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரால் எதுவும் செய்ய முடியாமல் சத்தம்போட அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது எனக்குத் தெரியவந்ததும் நான் அந்த நபரை தொலைபேசியில் அழைத்துக் கண்டித்தேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தில் நான் என்னுடைய மகளை சடலமாகப் பார்த்தேன். இந்த 2 குழந்தைகளைக் கொலை செய்து உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. குற்றம் செய்தவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களிடம் நான் கேட்கும் கேள்வி இதுதான்” என வலியுடன் கூறியுள்ளார்.

Tags : #KERALA #WALAYAR #SISTERS #MINOR #GIRLS #RAPE #MURDER #MOTHER #POLICE