‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. ‘தூக்கத்திலேயே பறிபோன உயிர்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை வைகை நதிக்கரை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கனரக வாகனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பணிகள் முடிந்து கட்டிட தொழிலாளர்கள் சாலையோரமாக ஆங்கங்கே படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது கான்கிரிட் கலவை லாரி ஒன்றை அதன் ஓட்டுநர் வெளியே எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் லாரி வரும் இடத்தில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் மூன்று பேரின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
இந்த விபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பெரியசாமி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த பாலு என்பவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
