‘மகள்’ போடும் கோலத்தை ‘ரசித்துக்’ கொண்டிருந்தபோது... அதிவேகத்தில் ‘பெண்’ ஓட்டிவந்த காரால்... 'தாய்' கண்முன்னே நடந்தேறிய 'துக்கம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த சிறுமி கார் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்தரவீதியை சேர்ந்தவர் மாதவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சொர்ணலட்சுமி. இவர்களின் மகள் தீப ரேகா (8). இவள் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் தை வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை தாயும், மகளும் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்தனர்.
அப்போது சிறுமி தீபரேகா கோலம் போட, சொர்ண லட்சுமி அருகே நின்று மகள் கோலம் போடும் அழகை கண்டு ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதைப்பார்த்து சொர்ணலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தீபரேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் அந்த காரை அதிகாலையில் வேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. தாய் கண் முன்னே சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
