“கல்யாண பொண்ணு சம்மதிச்சா.. கைதிக்கு இப்படி ஒரு சலுகையா?” - மாஸ் காட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 30, 2020 07:23 AM

சிறையில் இருப்பவரை திருமணம் செய்யவிருக்கும் மணமகள் சம்மதித்தால் அந்த மணமகனுக்கு உடனடியாக ஜாமின் வழங்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

groom request bail for his marriage this is what court did

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ஆம் தேதி(இன்று) திருமணம் நடக்க உள்ளதால் ஜாமின் வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன்,  ‘சிறைக்கைதியாகிய வெங்கடேஷ் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைதாகி, கடந்த 24ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அவருக்கு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணிடம் பேசியதில், அப்பெண்ணுக்கும் அவரை திருமணம் கொள்வதற்கு சம்மதம் என்று தெரியவந்துள்ளது.

திருமணம் என்பது சிறைக்கைதி வெங்கடேஷின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை விளைவிக்கும் என நம்புகிறோம். எனவே ஜனவரி 30 ஆம் தேதி அன்று (இன்று) திருமணம் நடைபெற உள்ள அவருக்கு உடனடியாக ஜாமின் வழங்கி உத்தரவிடப்படுகிறது. மாலை 6 மணிக்குமேல் ஜாமினில் யாரும் வெளிவிடப்படுவதில்லை. ஆனால் அதிலிருந்து மனுதாரருக்கு விலக்கு அளித்து அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று கும்பகோணம் சிறைக்காவல் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடுகிறது’ என்று அதிரடியாய் கூறினார்.

Tags : #MADURAI #HIGHCOURT