‘டயர் வெடித்து லாரியில் மோதிய கார்’.. கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 09, 2020 09:11 AM

தூத்துக்குடி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

Car accident in Madurai Tuticorin National highway

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (73). இவரது மனைவி ஜோசப்மேரி (67). இவர் ஓய்வு பெற்ற பேராசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தேவாலயத்துக்கு ஞானராஜ் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் ஏறி எதிரே வந்த லாரியின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பேராசிரியை ஜோசப்மேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஞானராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி பேராசிரியை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.