‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி அருகே ஆட்டோவில் தவறவிட்ட முதியவர் பணத்தை ஆட்டோ டிரைவர் திரும்ப ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாவாசி (60). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனால் தந்தை அம்மாவாசியை கவனிக்க பிள்ளைகள் யாரும் முன்வராததாக கூறப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் குடிசை அமைத்து அம்மாவாசி வாழ்ந்து வருகிறார். மதுபாட்டில்களை சேகரித்து விற்று, அதில் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். அதில் மிச்சமாகும் பணத்தை வங்கியில் சிறுகச்சிறுக சேமித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஒத்திக்கு வீடு பார்த்து தங்க வேண்டும் என அம்மாவாசி முடிவெடுத்துள்ளார். அதனால் வங்கியில் உள்ள தனது 74,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு தேடியுள்ளார். அப்போது ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். மருத்துவமனை வந்ததும் பணத்தை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார். சிறுது நேரம் கழித்து பணம் காணாமல் போனதை அறிந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் அழகர்சாமி (32) முதியவர் ஆட்டோவில் தவறவிட்ட பையுடன் காவல் நிலையம் வந்துள்ளார். அதில் முதியவர் அம்மாவாசியின் பணம் 74,000 ரூபாய் மற்றும் வங்கு பாண்டுகள் இருந்துள்ளன. உடனே இதுகுறித்து அம்மாவாசிக்கு போலீசார் தகவல் கொடுத்து, அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த ஆட்டோ டிரைவர், ‘தினமும் நிறைய பேர் ஆட்டோவில் ஏறி இறங்குகிறார்கள். இந்த பையை யார் விட்டுச்சென்றது என தேடிக்கொண்டிருந்தேன். யாராவது பணத்தை கேட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தால் சொல்லுங்கள் என நண்பர்களிடம் கூறியிருந்தேன். நல்லவேளையாக முதியவர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்திருந்ததால் கண்டுபிடிக்க முடிந்தது. உழைச்ச பணம் எப்பவும் கையவிட்டு போகாது’ என தெரிவித்தார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.