‘ஆடையின்றி மிதந்த ஆசிரியை உடல்’.. கார் டிக்கியில் தலைமுடி.. மகளுக்கு பீஸ் கட்டும்போது வந்த ‘போன்கால்’.. பகீர் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 24, 2020 10:32 PM

கேரளாவில் தனியார் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Kasargod teacher murder case police arrested co employee

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்த மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ரூபஸ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி ரூபஸ்ரீ திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து காணாமல் போன 36 மணிநேரம் கழித்து கொய்ப்பாடி கடற்கரையில் ரூபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். அப்போது உடலில் துணிகள் இல்லாமலும், தலைமுடிகள் இன்றியும் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து ரூபஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரூபஸ்ரீயுடன் பள்ளியில் பணியாற்றிய ஓவிய ஆசிரியர் வெங்கட்ரமணா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று ரூபஸ்ரீ தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டச் சென்றுள்ளார். அப்போது ஒரு போன்கால் வந்துள்ளது. போனில் பேசியவுடன் ரூபஸ்ரீயின் முகம் மாறியதாக அவரது மகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது செல்போன் சிக்னலை போலீசார் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் கடைசியாக ஓவிய ஆசிரியர் வெங்கட்ரமணாவிடம் பேசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வெங்கட்ரமணாவின் கார் டிக்கியில் முடிகள் இருப்பதை போலீசார் பார்த்துள்ளனர். அதனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ரூபஸ்ரீயின் தலைமுடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெங்கட்ரமணாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ரூபஸ்ரீ பணிக்கு சேர்ந்த அதே வருடம் வெங்கட்ரமணாவும் பணியில் சேர்ந்துள்ளார். அதனால் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். ஒரே பள்ளியில் பணியாற்றுவதால் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. சமீபத்தில் லோன் எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபஸ்ரீயை வெங்கட்ரமணா அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். அந்த சமயம் தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் வெங்கட்ரமணாதான் என ஏற்கனவே உறவினர்களிடம் ரூபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

காணாமல் போன தினத்தன்று ரூபஸ்ரீ, வெங்கட்ரமணாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ரமணா பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து ரூபஸ்ரீயை கொலை செய்துள்ளார். பின்னர் காரில் கொண்டு சென்று கடலில் வீசியுள்ளார். இதற்கு அவரது கார் டிரைவரும் உதவி செய்துள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமுடியை எதற்காக வெட்டினார்கள்? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #KERALA #CRIME #MURDER #POLICE #KASARGOD #TEACHER