வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது, அவர்களின் உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவன், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தலை மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்பது தெரிய வந்துள்ளது.
