அவ கேட்டதெல்லாம் ‘இது’ மட்டும்தான்... ‘மணப்பெண்’ கேட்ட ‘100 பரிசுகள்’... தேடியலைந்து வாங்கி ‘அசத்திய’ மாப்பிள்ளை...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மெஹராக மணப்பெண் கேட்ட 100 புத்தகங்களையும் தேடியலைந்து வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இஜாஸ் ஹக்கிம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்பருக்கும் கடந்த அக்டோபரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய நிக்காஹ் முறைப்படி, மெஹராக மணப்பெண் கேட்கும் பொருளை மணமகன் கொடுத்தாக வேண்டும். அப்படி அஜ்னா தங்கம், வைரம் என எது கேட்டாலும் கொடுக்க இஜாஸ் தயாராக இருந்துள்ளார்.
ஆனால் தீவிர வாசிப்பாளரான அஜ்னாவோ அவரிடம் மெஹராக 100 புத்தகங்கள் வேண்டுமெனக் கேட்டு ஒரு பட்டியலையும் கொடுத்துள்ளார். அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து புத்தகங்களும் தனக்கு பரிசாக வேண்டுமெனக் கேட்ட அஜ்னா அவை புதிய புத்தகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார். முதலில் புத்தகங்களை மெஹராகக் கொடுக்க இஜாஸின் வீட்டில் சம்மதிக்காதபோதும், மணப்பெண் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்பதால் பின்னர் சம்மதித்துள்ளனர். இதையடுத்து அஜ்னாவிற்காக அலைந்து அவர் கேட்ட புத்தகங்களை வாங்கிய இஜாஸ் பெரும்பாலும் புதிய புத்தகங்களையே தேடி வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற இவர்களுடைய திருமணத்தில் இஜாஸ் தான் தேடியலைந்து வாங்கிய 96 புத்தகங்களை அஜ்னாவிற்கு பரிசாகக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் பட்டியலில் மீதமிருந்த 3 புத்தகங்களைக் வாங்கிக் கொடுத்தவர், ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ள 100வது புத்தகமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அஜ்னா கேட்ட புத்தகங்களின் பட்டியலில் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றுடன் மிஷல் ஒபாமா, ஹருகி முரகாமி, கலீத் ஹோசினி ஆகியோரின் புத்தகங்களும் இருந்துள்ளன. திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்கள் இருவரும் புத்தகங்களைப் படித்ததும் அதை நண்பர்களுடன் பரிமாற்றம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
