'ஆதாரம்' இல்லாததால் நடவடிக்கை இல்லை... 'பொள்ளாச்சி' வழக்கில்... திடுக்கிடும் திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 23, 2020 06:35 PM

பொள்ளாச்சி அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Pollachi Sexual Case: CBI withdraws attack case from court

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தியா முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை இரண்டு நாட்கள் கழித்து, 26-ம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலியல் வழக்கிலும் மணிவண்ணனுக்கு தொடர்பு இருந்ததால் அந்த வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பாபு, செந்தில், வசந்தகுமார் மூவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் மணிவண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

பல்வேறு தரப்பிலும் எழுந்த எதிர்ப்புகளை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமிருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு, அடிதடி வழக்கு இரண்டையும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்த நிலையில் அடிதடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கில் மேல் விசாரணையைக் கைவிடுவதாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இறுதி வாதம் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வருகிற 27-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், பாபு, சபரிராஜன், மணிவண்ணன் ஆகிய ஐவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.