'நடுரோட்டில்' கடும் வாக்குவாதம்... அசுர வேகத்தில் 'மோதிய' தனியார் பேருந்து... புது 'மாப்பிள்ளை' உள்ளிட்ட 4 பேர் 'சம்பவ' இடத்திலேயே பலி... 22 பேர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 23, 2020 12:11 AM

காரை உரசியபடி அரசு பேருந்து சென்றதால், காரை நிறுத்தி வாக்குவாதம் செய்தவர்கள் தனியார் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Private bus collision on Government bus in Trichy-Chennai Highway

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஐசக் அய்யா(54) என்பவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது மகன் ராஜன் விண்ணரசு(24) தந்தைக்கு உதவியாக கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ராஜனுக்கு கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ராஜன் விண்ணரசு குடும்பத்தினர் 2 கார்களில் வேலூர் நோக்கி புறப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து காரினை உரசியபடி சென்றது. இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் நடுரோட்டில் காரை நிறுத்தி அரசு பேருந்து டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்துக்கும், காருக்கும் இடையில் நின்றபடி பேருந்து டிரைவரும், காரில் வந்தவர்களும் வாக்குவாதம் செய்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்தின் மீது மோதியது.

இதில் புது மாப்பிள்ளை ராஜன் விண்ணரசு, அரசு பேருந்தில் பயணம் செய்த வெள்ளைச்சாமி(39), அருண் பாண்டியன்(30) மற்றும் சற்குணம்(39) ஆகிய பயணிகள், உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார் டிரைவர், பேருந்து டிரைவர், நடத்துநர் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கோர விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.