திடீரென ‘தாயிடமிருந்து’.. ‘சிறுவனை’ தூக்கிக் கொண்டு ஓடிய ‘இளைஞர்’.. ‘பிரபலமாக’ செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 09, 2019 05:47 PM
லண்டனில் பிரபலமாவதற்காக இளைஞர் ஒருவர் செய்த நடுங்க வைக்கும் காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரைச் சேர்ந்த ஜான்டி பிரேவரி (18) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மார்டன் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் தனது 6 மகனுடன் அங்கு வந்துள்ளார். அருங்காட்சியகத்தில் நீண்ட நேரமாக அந்தப் பெண்ணின் மகனையே பார்த்துக்கொண்டிருந்த ஜான்டி பிரேவரி அவர் அசந்த நேரம் பார்த்து சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மற்றும் அருகிலிருந்தவர்கள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் அந்தக் கட்டிடத்தின் 10வது மாடிக்குச் சென்ற ஜான்டி பிரேவரி சிறுவனை அங்கிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். தூக்கி வீசப்பட்டதில் 5வது மாடியின் கூரை மீது விழுந்த சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, 2 பெரிய அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் அடிக்கடி சிறுவன் ஆபத்தான நிலைக்கு சென்றுவிடுவதாக குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஜான்டி பிரேவரியைக் கைது செய்த போலீஸார் விசாரணையின் போது அவர் கூறிய காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.
போலீஸாரிடம் ஜான்டி பிரேவரி அளித்த வாக்குமூலத்தில், “ஒவ்வொரு முட்டாளுக்கும் என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னைப் பற்றி டிவி மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி வந்து நான் ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என விரும்பி தான் இதை செய்தேன்” எனத் தயக்கமின்றி சிரித்துக்கொண்டே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வரும் பிப்ரவரி மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில், தற்போது தான் ஜான்டி பிரேவரிக்கு 18 வயது பூர்த்தியானதால் வெளியுலகிற்கு அவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.