‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 04, 2019 05:15 PM
பெண் உயிரிழந்து 2 மாதங்கள் கழித்து அவர் கொலை செய்யப்பட்டது அவருடைய 6 வயது மகனின் சாட்சி மூலம் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மனைவி சுமலதா மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வீட்டில் சுமலதா இறந்து கிடந்துள்ளார். அடிக்கடி உடல்நிலை சரியில்லை, நெஞ்சு வலி என சுமலதா கூறிவந்ததால் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக எண்ணிய குடும்பத்தினர் அவரை தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் சுமலதா உயிரிழந்து 2 மாதங்கள் கழித்து தேவராஜிடம் அவருடைய மகன், “அம்மாவை ஒரு மாமா அறைக்குள் அழைத்துச் சென்று அடித்தார்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன தேவராஜ் உடனடியாக மகனுடன் சென்று போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
போலீஸாரிடம் சம்பவத்தன்று நடந்ததைக் கூறிய சிறுவன், “ஒருநாள் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் மாமா அம்மாவுடன் அறைக்குள் சென்றார். அங்கே இருவரும் சத்தமாகப் பேசி சண்டை போட்டார்கள். பின் வெங்கடேஷ் மாமா அம்மாவைத் தலையில் அடித்ததை நான் பார்த்தேன். பின் அவர் புடவையால் அம்மாவின் கழுத்தை நெரித்தார். அம்மா அப்படியே கீழே விழ அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் வெங்கடேஷுக்கும், சுமலதாவிற்கு திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாகியிருந்த வெங்கடேஷைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
போலீஸாரிடம் வெங்கடேஷ் அளித்த வாக்குமூலத்தில், “எனக்கும் சுமலதாவிற்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நிறுத்திக்கொள்ளலாம் என அவர் கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளாததால் அவர் அனைத்தையும் என் குடும்பத்தினரிடம் கூறிவிடுவேன் என மிரட்டினார். அதனால்தான் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். அவசரத்தில் அருகில் அவருடைய மகன் இருந்ததை நான் கவனிக்கவில்லை” எனக் கூறியுள்ளார். தகாத உறவால் மகன் கண்முன்னே தாய் கொலை செய்யப்பட்டதும், அது சிறுவன் மூலமாக 2 மாதங்கள் கழித்து தெரியவந்துள்ளதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.