‘பேருந்து இல்லாததால்’... ‘லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமிக்கு’... ‘இளைஞரால் நேர்ந்த கொடூரம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 09, 2019 03:40 PM
திருப்பதி அருகே லிஃட் தருவதாகக் கூறி, 16 வயது சிறுமியை இரு இளைஞர்கள், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே பத்மாவதிபுரத்தில், 16 வயது சிறுமி ஒருவர், திருச்சானூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக, கடந்த நவம்பர் 24-ம் தேதி இரவு பேருந்து நிலையத்தில், வெகுநேரம் காத்திருந்துள்ளார். எந்த வாகனங்களும் அவ்வழியே வராததால், அப்போது டூ வீலரில் வந்த இளைஞரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து இளைஞரான வெங்கடேஷ் (28), லிஃப்ட் தருவதாகக் கூறி சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
கொஞ்ச தூரம் சென்றதும், சிறுமிக்கு தெரியாதவாறு வழியை மாற்றிய அந்த இளைஞர், திருச்சானூருக்கு செல்வதற்கு பதிலாக, முந்துலாபொடி என்ற கிராமத்தில் நடுகாட்டில் பைக்கை நிறுத்தியுள்ளார். பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் பைக் நின்றுவிட்டதாக சிறுமியிடம் பொய்யாக கூறிய வெங்கடேஷ், தனது நண்பரான ராஜ்மோகன் நாயக் (28) என்பருக்கு போன் செய்து, பெட்ரோல் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர், அங்கு வந்த ராஜ்மோகன் மற்றும் வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அங்கேயே, நடுக்காட்டில் இரவில் விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். சிறுமி கத்தியும் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர், அதிகாலை வீட்டுக்கு திரும்பிய சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை செய்த போலீசார், இளைஞர்கள் இருவரையும் கடந்த ஞாயிற்றுகிழமை கைது செய்தனர். இதன் பின்னரே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல் நலம் தேறி வருகிறார். பகல், இரவு எந்த நேரமாக இருந்தாலும், தெரியாத நபர்களிடம் பெண்கள் லிஃப்ட் கேட்க வேண்டாம் என்று இந்த வழக்கை கையாண்டு வரும் காவல்துறை அதிகாரியான முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
