‘துண்டான கை’... ‘விரைந்து செயல்பட்ட பெற்றோர்’... ‘நம்பிக்கை கொடுத்த மருத்துவர்கள்’... ‘மீண்டும் இணைந்த சிறுவனின் கை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 26, 2019 04:58 PM

துண்டான சிறுவனின் கையை மீண்டும் இணைத்து, சேலம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Doctors successfully reconnected the boy\'s severed hand

சேலம் ஐந்து ரோடு அருகே கந்தம்பட்டி புறவழிச்சாலையில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான ராமன். இவரது மகன் மௌலீஸ்வரன் (11). கடந்த 8-ம் தேதி காலை வீட்டருகே சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் பஞ்சர் போடும் கடையில் இருந்த காற்றுப் பிடிக்கும் இயந்திரம் அழுத்தம் தாங்காமல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பறந்து வந்த இரும்புத் துண்டு ஒன்று மௌலீஸ்வரனின் வலது கையை மணிக்கட்டு வரை துண்டாக்கியுள்ளது.

அலறித்துடித்த மகனை, சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது துண்டான சிறுவனின் கையின் பகுதியை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரை மணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால், மருத்துவர்களும் தயாராக இருந்தனர்.

சிறுவன் வந்ததும் சுமார், 11 மணி நேரம் போராடி, வெற்றிகரமாக துண்டான பகுதியை கையுடன் இணைத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பெற்றோர் துரிதகதியில் செயல்பட்டதே, இந்த அறுவை சிகிச்சை 100 சதவிகிதம் வெற்றிபெற காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குணமாகி வரும் சிறுவனுக்கு, இன்னும் ஒரு மாத காலத்திற்குள், கை வழக்கம்போல செயல்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு, குழந்தையும் காப்பாற்றப்பட்டதால், கூலித்தொழிலாளர்களான சிறுவனின் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்து, மருத்துவர்களுக்கு கண்ணீ; மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags : #BOY #PARENTS #DOCTORS