‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 29, 2019 06:12 PM
பெரியகுளம் அருகே அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. சுமதி கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சமீபத்தில் வீரபத்திரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அதற்காக அரளி விதைகளை அரைத்து பாலில் கலந்து வைத்துள்ளார். அப்போது உறவினர் ஒருவரது குரல் கேட்டு வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அந்த சமயம் குழந்தை அழுதுள்ளது. தம்பி அழுவதை கண்ட 10 வயது சிறுமி அரளி விதை கலந்த பாலை தெரியாமல் பாட்டிலில் அடைத்து கொடுத்துள்ளார்.
பாலை குடித்ததும் குழந்தை அதிகமாக அழத்தொடங்கியுள்ளது. குழந்தை அழுகும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் ஓடி வந்த சுமதி, அரளி விதை கலந்த பாலை குழந்தை குடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தனது சகோதரியின் உதவியுடன் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து மேல்சிகிச்சைகாக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய், தந்தை இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தாயின் அலட்சியத்தால் அரளி விதை கலந்த பாலை குடித்து 5 மாதக் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.