‘ஸ்கூல் நோட் புக்கிலிருந்து’... ‘பேப்பரை கிழித்து’... ‘புகார் கொடுத்த 10 வயது சிறுவன்’... 'பாராட்டுகளை அள்ளிய போலீசார்'... வைரலான போட்டோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Nov 29, 2019 04:49 PM
கேரளாவில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், தனது நோட்புக்கிலிருந்து பேப்பரை கிழித்து காவலல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளநிலையில், அதை 2 நாளில் முடித்துக்கொடுத்து அனைவரது பாராட்டையும் பேலீசார் பெற்றுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மேப்பையூர் காவல்நிலையத்திற்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது, அந்த காவல்நிலையத்திற்கு வந்த 5-ம் வகுப்பு படிக்கும் அபின் என்ற சிறுவன், தனது பள்ளி நோட் புத்தகத்திலிருந்து கிழித்த பேப்பரில், புகார் ஒன்றை எழுதி வந்து கொடுத்துள்ளான். அதில், 'கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நானும், எனது தம்பியும், எங்களுடைய சைக்கிளை பழுது பார்த்து தருமாறு, சைக்கிள் கடையில் விட்டிருந்தோம்.
இதற்கு முன் பணமாக 200 ரூபாயும் கொடுத்தோம். ஆனால், குறிப்பிட்ட தேதியில் சைக்கிள் வராததால், கடைக்காரருக்கு ஃபோன் செய்தோம். ஆனால் அவர் ஃபோனை எடுக்கவில்லை. அப்படியே எடுத்தாலும் விரைவில் கொடுத்துவிடுகிறேன் என்று பதில் கூறினார். நேரடியாகக் கடைக்குச் சென்றாலும் கடை எப்போதும் பூட்டியே உள்ளது. இப்படியே 2 மாதகாலம் ஆகிவிட்டது. எங்களது வீட்டில் இதைப் பற்றி விசாரிக்க யாரும் இல்லை. அதனால் நீங்கள் தலையிட்டு, எங்களது சைக்கிளை பெற்றுத்தர வேண்டும்’ என்று எழுதியிருந்தான்.
மற்றவர்கள் பார்வையில் இது சில்லியாக தெரிந்தாலும், முறையான புகார் கூட கொடுக்கவில்லை என்றாலும், சிறுவனின் நம்பிக்கையை கண்டு வியப்படைந்த போலீசார், உடனே அந்தக் கடைக்கு விரைந்து காலதாமதம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தனது மகனின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததாலும், இதனால் தனக்கு சற்று உடல்நிலை சரியில்லாததாலும் சைக்கிளை பழுது பார்த்து தர முடியவில்லை என்று கடைக்காரர் கூறினார்.
எனினும் போலீசாரின் தலையீட்டால் சைக்கிள் சரிசெய்யப்பட்டு, தாமதமின்றி 2 நாட்களில் சிறுவனிடம் சைக்கிள் ஒப்படைக்கப்பட்டது. இதை கேரளா போலீஸ் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ’புகார் தீர்த்து வைக்கப்பட்டது’ என்று போஸ்ட் செய்துள்ளனர். பதிலுக்கு அபினும் மகிழ்ச்சியோடு சைக்கிளுடன் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
