எல்லாம் சரியாயிடும்... சமாதானம் செய்த பெற்றோர்... இளம்பெண்ணின் விபரீத முடிவு... ஒரே ஒருமுறை பார்க்கணும்... கெஞ்சிய கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 30, 2019 10:05 AM

பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு, இறந்து கிடந்த நிலையில், மனைவி முகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன் என வெளிநாட்டிலிருந்து வந்த கணவர் கதறித் துடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pattukottai woman committed suicide over family issue

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி அல்பாத். இவர்களுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த 3 மாதத்தில், கணவர் சாகுல் ஹமீது வெளி நாட்டில் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால், மனைவி அல்பாத் கணவர் வீட்டில் வசித்து வந்தார். அல்பாத்துடன், அவரது மாமியார் ராபிக் கமால், பெரிய மாமியார் சுபைதோ மற்றும் நாத்தனார் ஹைஜாம்மாள் ஆகியோர் ஒரே வீட்டில் இருந்துள்ளனர். நாத்தனார் ஹைஜாம்மாளுக்கு திருமணம் ஆகியும், கணவர் அதே ஊர் என்பதால், அவரது வீட்டுக்கு செல்லாமல், தனது அம்மா வீட்டிலேயே இருந்துள்ளார்.

சில மாதங்கள் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், அதன்பிறகு அடிக்கடி அல்பாத் தன் அப்பா குல்புதீனிடம் `அப்பா என்னை இங்க கொடுமைப்படுத்துறாங்க' எனக் அழுது கொண்டே சொல்லக் கணவர் வந்ததும் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறி பெற்றோர் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். எனினும், நாத்தனார் ஹைஜாம்மாள், எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல், அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்யச் சொல்வது போன்ற கொடுமைகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பல நேரங்களில் நாத்தனார் ஹைஜாம்மாள், அல்பாத்திடம் சைகோ போல் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை தன் பிறந்த வீட்டில் தொடர்ந்து சொல்லிவந்தாலும் அவர்கள் அல்பாத்தை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு, கொஞ்ச நேரத்தில் இளம்பெண் அல்பாத், தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார். பின்னர், ஒரத்தநாட்டில் வசிக்கும் அல்பாத்தின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்த பெற்றோர், ‘வாழ வேண்டிய வயதில் இப்படி சடலமாக கிடக்கிறாளே’ என்று அல்பாத்தின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

மனைவி இறந்த செய்தி கேட்டு வெளிநாட்டிலிருந்து கணவர் சாகுல் ஹமீதும் அதிராம்பட்டினம் உடனடியாக வந்துவிட்டார். ஆனால் அல்பாத்தின் உடலை பார்க்க, அவரது பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடைசியாக ஒரே ஒரு முறை மனைவியின் முகத்தை பார்த்துக் கொள்கிறேன் எனக் கண்கள் கலங்க கெஞ்சியதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், அல்பாத்தின் உடலை, அவரது தந்தை குத்புதீன் முன்னிலையில் பார்த்து சென்றார். பின்னர், அல்பாத்தின் குடும்பம் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டு, அவரது இறுதிசடங்கை கணவர் இல்லாமலேயே செய்து முடித்தனர்.

மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவுசெய்த போலீசார், அல்பாத்தின் நாத்தனார், மாமியார், பெரிய மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். ஏனெனில் அல்பாத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நேரத்தில், அல்பாத் உட்பட 4 பேருமே வீட்டில்தான் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணையின் முடிவில் தான் மற்றவை தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #DAUGHTER #PARENTS #HUSBAND