‘ஃபோன்’ செய்தும் எடுக்கல... ஆசைப்பட்டு சேர்ந்த... வங்கி அதிகாரியின் ‘விபரீத’ முடிவு... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ஊழியர்கள்... சிக்கிய ‘கடிதம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 20, 2019 03:14 PM
சிவகங்கை அருகே தனியாா் தங்கும் விடுதியில், இளம் வங்கி அதிகாரி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சோ்ந்த சந்தானம் என்பவரது மகன் ஸ்ரீதா் (28). இவா், மதுரை கருங்காலக்குடியில் உள்ள, இந்தியன் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் அருகில் சிங்கம்புணரி பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கி, ஸ்ரீதா் வங்கிக்குச் சென்று வந்தாா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வேலை முடிந்தப் பின்பு விடுதிக்கு சென்ற அவர், வியாழக்கிழமை காலை வங்கி நேரம் ஆரம்பித்தப் பின்னும், வரவில்லை. முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளின் சாவி ஸ்ரீதரிடம் இருந்ததால், அவரது ஃபோன் நம்பருக்கு, வங்கி மேலாளா் கிரண் குமாா் தொடா்பு கொண்டுள்ளாா்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து, அவரிடம் இருந்த சாவியை வாங்கி வர, வங்கி ஊழியர்கள் ஸ்ரீதர் தங்கியிருந்த அறைக்குச் சென்றுப் பார்த்துள்ளனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், ஸ்ரீதர் கிடந்துள்ளார். இதைப்பார்த்து வங்கி ஊழியர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் விடுதி ஆட்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் ஸ்ரீதரின் அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனா். அதில் ‘எனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை’ என்று எழுதப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். படிப்பில் எப்போதும் கெட்டியாக இருந்த ஸ்ரீதர், ஆசைப்பட்டுதான் வங்கி வேலையில் சேர்ந்ததாக, அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அமைதியாகவே வலம் வந்த ஸ்ரீதர், தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஸ்ரீதரின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.