‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 25, 2019 09:59 AM

பெங்களூருவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கணவர் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bengaluru Man Hired 2 To Kill Estranged Wife 3 Arrested

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதி வினுதா - நரேந்திர பாபு. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் ஒருவர் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவரும் இவர்கள் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து நரேந்திர பாபு தன் மகனுடன் வசித்துவந்த நிலையில், வினுதா பெங்களூருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வினுதாவின் செல்ஃபோனுக்கு நீண்ட நேரமாக அழைத்தும் அவர் எடுக்காததால் அவருடைய தாய் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வினுதா தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். வினுதா வீட்டிற்குள் இருந்த சிமென்ட் தொட்டிக்கு அருகில் இறந்து கிடந்ததால் அவர் தவறி விழுந்து அடிபட்டதில் இறந்திருக்கலாம் என போலீசார் நினைத்துள்ளனர். அதன்பிறகே வினுதா நரேந்திராவுடனான பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வந்ததும், அவர் வசித்துவந்த வீட்டை கணவர் விற்க முயற்சி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வினுதாவின் வீட்டை மீண்டும் சோதித்தும் கொலைக்கான எந்தத் தடயமும் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. பின்னர் வினுதாவின் பாத்ரூமை சோதனை செய்தபோது அங்கிருந்த ஜன்னல் கண்ணாடி கழற்றி மாட்டியதுபோல இருந்துள்ளது. இதை வைத்து கொலையாளி அந்த வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் நரேந்திராவைப் பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் நரேந்திராவிடம் நடத்திய விசாரணையில், அவர் மனைவியைக் கொலை செய்ய ரூ 5 லட்சம் கொடுத்து 2 பேரை ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த அந்த 2 பேர் சோபாவில் அமர்ந்திருந்த வினுதாவை கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு, கொலையை விபத்து போல சித்தரிக்க உடலை சிமென்ட் தொட்டி அருகே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட இருவரும் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசிப்பவர்கள், வீட்டின் அமைப்பை தெரிந்தவர்கள் என்பதால் சந்தேகமே வராதபடி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Tags : #CRIME #MURDER #KARNATAKA #MONEY #BENGALURU #HUSBAND #WIFE #FAMILY