‘வேண்டாம்னு சொன்னேன்’!.. ‘கேட்கல’!.. சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 20, 2019 09:23 PM

திருமணமான நான்கே மாதத்தில் மனைவியை கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Husband murdered his wife near Pallikaranai in Chennai

சென்னை மாதாவரத்தில் அய்யனார் (31) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அஞ்சலி (21) என்ற பெண்ணுடன் அய்யனாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பள்ளிகரணையில் வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அய்யனாரின் வீடு நீண்ட நேரமாக பூட்டியே இருந்துள்ளது.

இதனால் அக்கம்பக்கத்தின் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது அஞ்சலி மட்டும் படுக்கையில் படுத்திருந்துள்ளார். அவரை அழைத்துப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் கண் விழிக்கவில்லை. இதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அஞ்சலி இறந்து சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஞ்சலியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அய்யனாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், ‘அஞ்சலியின் உறவினர் ஒருவர் ஊரில் இறந்துவிட்டார். அதற்கு செல்ல வேண்டும் என என்னை அழைத்தார். கல்யாணமாகி சில மாதங்களே ஆவதால் ஊருக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கமால் ஊருக்கு புறப்பட்டார். நான் அவரை தடுத்தேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கழுத்தை பிடித்து நெரித்தேன். உடனே மயங்கி விழுந்துவிட்டாள். அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன்’ என தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று அய்யனார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமான நான்கே மாதத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #KILLED #CHENNAI #HUSBAND #WIFE