'ரகசியங்களை' உடைத்த காசி?... மருத்துவ பரிசோதனை செய்து 'சிறையில்' அடைக்க முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காசியை மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெண்களை ஏமாற்றியது அவர்களிடம் பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் நாகர்கோவிலை சேர்ந்த காசியை போலீசார் குண்டர் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் கைது செய்துள்ளனர். முன்னதாக போலீசார் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து நிலைய மகளிர் போலீசார் காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என காசி தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் காசியின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நாளை இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. அதன்பின்பு நாளை மாலை காசியை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். காசி விவகாரம் பற்றி போலீசார் கூறும்போது, ''போலீஸ் காவலில் காசி பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அவர் கொடுத்த தகவலின் பேரில் கைது வேட்டை தொடங்கும். அப்போது இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்,'' என்று தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
