அம்மா, புள்ள 'ரெண்டு' பேரையும்.. எங்க 'கண்ணுலயே' காட்டல... இளம்பெண் மரணத்தால் 'கொதித்துப்போன' உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 21, 2020 02:17 PM

பிரசவித்த இளம்பெண் இறந்து போனதால் அவரின் உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

Young Woman Dies in Nilgris District , Police Investigate

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). எலெக்ட்ரீசியன் ஆன இவருக்கும் மாயா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு, நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நள்ளிரவில் மாயா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாயாவின் இறப்பால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாயா சாவில் மர்மம் இருப்பதாக அந்த மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்த அங்கு இருந்த அவரது உறவினர்கள், '' மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 7 மணி வரை குழந்தையையும், தாயையும் எங்களிடம் காண்பிக்கவில்லை. எனவே மாயாவின் சாவில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்,'' என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து மாயாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.