உடலில் துணியின்றி 'கழுத்தறுபட்டு' கிடந்த மின்வாரிய ஊழியர்... 'அதிர்ந்து' போன அரியலூர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 20, 2020 05:40 PM

பெற்ற தந்தையின் உடைகளை களைந்து மகன்களே கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம் அரியலூர் அருகே நடந்துள்ளது.

Employee Murdered at Power Station, Police Investigate

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை (50). இவர் அப்பகுதியில் உள்ள துணை மின்நிலையமொன்றில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அஞ்சம்மாள் (50) என்பவருக்கு கமலா (30) என்ற மகளும், கலைச்செல்வன் (27), கலைவாணன் (21) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். 2-வது மனைவி சங்கீதாவிற்கு, தினகரன் (20), தினேஷ்குமார் (16) என்ற இரு மகன்களும், திவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

முதல் மனைவி அஞ்சம்மாளுடன் சேர்ந்து வாழ முடியாது என கோர்ட்டில் கனகசபை சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மேலும் இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதல் மனைவியை பிரிந்த கனகசபை 2-வது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கனகசபை வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கனகசபையை கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

தொடர்ந்து நேற்று காலை வேலைக்கு வந்த மற்றொரு ஊழியர் கதவை திறந்து பார்த்தபோது கனகசபை அங்கு உடலில் துணிகள் எதுவுமின்றி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ந்து போன அவர் போலீசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். இதில் மூத்த மனைவியின் மகன்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தங்களது தந்தையை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள், ''எங்களது தாய் அஞ்சம்மாளை, கனகசபை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் நாங்கள் எங்களுக்கு ஜீவனாம்சம் தாருங்கள் என்று கேட்டோம். ஆனால் அதற்கு அவர், ஏற்கனவே உங்களுக்கு அதிகமாக செய்துவிட்டேன். இனிமேல் என்னால் எதும் தரமுடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 2 பேரும் சேர்ந்து எங்களது தந்தையை கொலை செய்தோம்,'' என்று கூறினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.