ரூ.10000 ஆயிரத்துக்கு வாங்கப்பட்ட 'விஷப்பாம்பு'... இளம்பெண் மரணத்தில் அவிழ்ந்த 'மர்ம' முடிச்சுகள்... 'கொலையாளியை' கைது செய்த காவல்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாம்பு கடித்து இறந்த கேரள இளம்பெண்ணின் மரணம் கொலை என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா(25) என்பவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மாதம் கணவருடன் தூங்கிக்கொண்டு இருந்த உத்ரா காலில் ஏதோ கடித்து விட்டதாக அலறி இருக்கிறார். இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உத்ராவை பாம்பு கடித்து விட்டதாக கூறி அவருக்கு 16 நாட்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டதால் உத்ரா தன்னுடைய தாய் வீட்டிலேயே தங்கி இருந்தார். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி மீண்டும் பாம்பு கடித்து உத்ரா இறந்து விட்டார். இது கேரளா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உத்ராவின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறை உத்ராவின் கணவர் சூரஜை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் கொலையாளி அவர் தான் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''சூரஜிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு அவரது மொபைல்போனை சோதித்தோம். உத்ராவை முதலில் பாம்பு கடித்த மார்ச் 2-ம் தேதிக்கு முந்தினநாள் வரை அடூரைச் சார்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் போனில் பேசியிருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பாம்பாட்டியைப் பிடித்து விசாரணை நடத்தியபோது கருமூர்க்கன் என்ற கொடும் விஷம் கொண்ட பாம்பை 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் விலைக்கு வாங்கியது தெரியவந்தது.
ஜன்னல் வழியாகப் பாம்பு புகுந்திருக்கலாம் என சூரஜ் முதலில் தெரிவித்தார். தரையில் இருந்து வீட்டின் இரண்டாவது மாடிக்கு பாம்பு செல்வது என்பது சாத்தியம் இல்லாதது. அப்படி ஜன்னல் வழியாகப் பாம்பு சென்றிருந்தாலும் முதலில் படுத்திருந்த சூரஜ், அதற்கு அடுத்து படுத்திருந்த அவர்களது மகனையும் தாண்டிச் சென்று உத்ராவை பாம்பு எப்படி கடிக்கும் எனக் கேட்டோம். சூரஜ் பதில்கூற முடியாமல் நின்றார். மனைவியைக் கொலை செய்வதற்காக ஆறு மாதங்களாகப் பாம்பாட்டியிடம் சூரஜ் போனில் பேசிவந்துள்ளார். சூரஜுக்கு பாம்பு விற்பனை செய்த கல்லுவாதக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த கொலை தொடர்பாக சூரஜின் உறவினர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்ரா கொலைக்கு வெறும் வரதட்சணை மட்டும் தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த மனைவியை கொலை செய்ய கணவனே பாம்பை கொண்டுவந்து விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.