டிக் டாக் 'திருமணத்தால்' போலீசில் சிக்கிய 'மணமக்கள்'... நேரில் வரச்சொன்ன போலீசாருக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கின் போது திருமணம் செய்து அதை டிக்டாக்கிலும் இளைஞர் ஒருவர் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோரட்டி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விலையுயர்ந்த பைக்கில் இளம்பெண் ஒருவருடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் பைக்கை நிறுத்துமாறு சைகை காட்ட அந்த பைக் நில்லாமல் சென்று விட்டது. பைக்கின் நம்பரை வைத்து உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
ஆனால் அந்த இளைஞர் தன்னுடைய உடையை அணிவித்து வேறொரு இளைஞரை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிக் டாக் வழியாக பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருக்கு திருமண வயது வரும்வரை காத்திருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தற்போது அவருக்கு உரிய வயது வந்து விட்டதால் இருவரும் அருகில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு அதை டிக் டாக் செயலியிலும் பதிவிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்தை முடித்துக்கொண்டு வரும்போது தான் போலீசார் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். இதனால் பயந்து போய் தான் வேகமாக பைக்கில் சென்றேன் என அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து இருவரின் குடும்பத்தினரையும் போலீசார் நேரில் அழைத்து பேசியுள்ளனர்.
அப்போது தான் இரு வீட்டாருக்கும் இவர்களின் திருமணம் விவரம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.