பெண்களை ஏமாற்றியது அவர்களிடம் பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் நாகர்கோவிலை சேர்ந்த காசியை போலீசார் குண்டர் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் கைது செய்துள்ளனர். முன்னதாக போலீசார் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து நிலைய மகளிர் போலீசார் காசியை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமூக வலைதளம் வழியாக காசிக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதும் இருவரும் பைக்கில் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்துள்ளது. காசி குறித்த தகவல்கள் தெரிய வந்ததும் சிறுமி, காசியிடம் இருந்து விலகி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுவரை எத்தனை பெண்களை காசி ஏமாற்றி இருக்கிறார்? என அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவர் நானாக எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை. என்னுடன் நெருங்கி பழகியவர்களிடம் மட்டும் தான் பழகினேன். யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அவருடைய நண்பர்கள் குறித்த கேள்விக்கு காசி மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவாறு கூறுகையில், ''காசி தொடர்பாக ஏதாவது புதிய புகார்கள் அல்லது ஆதாரங்கள் சிக்குமா? என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதுபோல பாதிக்கப்பட்டவர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கூட புகார் அளிக்கலாம். காசி பயன்படுத்திய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தற்போது லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆய்வு செய்ய கோர்ட்டில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு அனுமதி அளித்தால் லேப்-டாப்பை ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்படும். பின்னர் லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் நகலை கொண்டு விசாரணை தொடங்கப்படும். லேப்-டாப்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருந்தால் அதை வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை அணுக முடியும். அவர்கள் எவ்வாறு பிரச்சினையில் சிக்கினார்கள் என்பது பற்றி விசாரிக்க முடியும். எனவே அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.