‘ஆத்திரத்தில் அண்ணனின் மனைவியை’.. ‘கொலை செய்துவிட்டதாக நினைத்து’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 07, 2019 10:54 AM

கடலூரில் அண்ணனின் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக நினைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore Man Kills His Brothers Wife Commits Suicide

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி சிவகாமி (30), மகன்கள் ஹரிஹரன் (11), ஆகாஷ் (9). குழந்தைவேலின் தம்பியான ஆறுமுகம் (28) தனது தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஆறுமுகத்தின் வீடு முன்புறத்திலும், குழந்தைவேலின் வீடு பின்புறத்திலும் உள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அண்ணி சிவகாமியை இரும்புக் கம்பியால் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதைப்பார்த்து சிவகாமி இறந்துவிட்டதாகக் கருதிய ஆறுமுகம் உறவினர்களுக்கு பயந்து தனது வீட்டுக்குச் சென்று அங்குள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் தகவலறிந்து போலீஸார் வந்து பார்த்தபோது சிவகாமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து போலீஸார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட ஆறுமுகத்தின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CUDDALORE #VIRUDHACHALAM #BROTHER #WIFE #MURDER #SUICIDE #FAMILY