‘உயிர காப்பாத்தணும்’.. ‘வேற எதப்பத்தியும் யோசிக்கல’.. வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுக்க முயன்ற தீயணைப்பு வீரர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவேற்காடு அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியவரை மீட்க போராடிய தீயணைப்பு வீரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடபெற்றுள்ளது. இதற்காக மதுரவாயல் பெரியார் தெருவை சேர்ந்த பாலா, பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட நான்கு பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக பாலா என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது கழிவுநீர் தொட்டியின் அடியில் உள்ள சகதியை அகற்றும்போது பாலாவை விஷவாயு தாக்கியுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு தொட்டிக்குள்ளேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடன்வந்தவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த பாலாவை மேலே கொண்டு வந்துள்ளனர். பின்னர் சற்றும் யோசிக்காமல் பாலாவின் வாயோடு வாய் வைத்து சுவாசமளிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாலா உயிரிழந்தார். விஷவாயு தாக்கியவரின் உடல் முழுவதும் கழிவுநீர் இருந்தாலும் அதுபற்றி சற்றும் யோசிக்காமல் உயிரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
