'சீறிப்பாய்ந்த பைக்குகள்'... 'வீலிங் செய்து சாகசம் காட்டிய இளைஞர்கள்'... 'கடைசியில் 16 பேருக்கு நேர்ந்த துயரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 07, 2020 10:46 PM

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Bike race and wheeling in Chennai Besant nagar 16 Arrested

சென்னை மெரீனா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அடிக்கடி பைக் ரேஸ் நடந்து வருகிறது. போலீசார் ரேசில் ஈடுபடுபவர்களை கைது செய்தும், எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து ரேஸ் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி பெசன்ட்நகர் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக்ரேசில் ஈடுபட்டனர்.

பைக்கில் சீறிப்பாய்ந்த அவர்கள் வீலிங் செய்து சாகசத்திலும் ஈடுபட்டனர். இதில் சாகசம் காட்டியபோது ஒரு இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனைப் பார்த்து அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞர்களின் இந்த பைக் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது. இதுபற்றி போலீசாருக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வீடியோ காட்சி மூலம் அதில் பதிவான வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பைக் ரேசில் ஈடுபட்ட அயனாவரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியை சேர்ந்த 16 பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர். இதில் கல்லூரி மாணவர்களும் சிக்கி உள்ளனர். ரேசுக்கு பயன்படுத்திய 7 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Tags : #RACE #BIKE #CHENNAI