‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 22, 2020 11:17 AM

சென்னையில் கல்லூரி மாணவியை 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 3 Students Arrested For Kidnapping Girl Over Lover Issue

சென்னை மாங்காட்டை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று காலை அதிவேகத்தில் சென்ற ஹூண்டாய் கார் ஒன்று பள்ளத்தில் சிக்கி நின்றுள்ளது. அப்போது அந்தக் காருக்குள் இருந்து இளம்பெண் ஒருவரில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் அருகே சென்று பார்த்தபோது, காருக்குள் 3 இளைஞர்களும், தப்பித்துச் செல்ல முடியாமல் அலறியபடி ஒரு இளம்பெண்ணும் இருந்துள்ளனர்.

அதைப் பார்த்த மக்கள் காரில் இருந்த 3 இளைஞர்களுக்கும் தர்மஅடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை ஒப்படைத்துள்ளனர். பின்னர் போலீஸ் விசாரணையில், ஒரு தலையாகக் காதலித்து வந்த நண்பனுக்கு உதவுவதாக நினைத்து அவர்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் இளம்பெண்ணைக் கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண் உளவுத்துறை போலீஸ் அதிகாரியின் மகள் என்பதும் தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கும் அந்தப் பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் தன் நண்பர்களான 2 பள்ளி மாணவர்களிடம் அந்தப் பெண்ணும் தன்னைக் காதலிப்பதாக பொய்க் கதைகளைக் கூறி வந்துள்ளார். பின்னர் அவர்களை வைத்து அரவிந்த்குமார் தான் காதலிக்கும் பெண்ணைக் கடத்த திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணிற்கு விருப்பமில்லாமல் வீட்டில் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார். அதை நம்பிய அவர்களும் அந்தப் பெண்ணை அழைத்து வர காரில் உடன் சென்றுள்ளனர். பின்னர் கல்லூரி செல்லும் வழியில் அந்தப் பெண்ணை வாயைப் பொத்தி காருக்கு ஏற்றியபோதுதான் அரவிந்த்குமாரின் நண்பர்களுக்கு அது ஒரு தலைக்காதல் எனத் தெரியவந்துள்ளது.

ஆனாலும் நண்பனுக்கு பிடித்த பெண்ணை எப்படியாவது அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட முடிவு செய்த அவர்கள் காரில் உடன் சென்றுள்ளனர். அப்போதுதான் கார் பள்ளத்தில் சிக்கி மாட்டியுள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் இருவரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ள போலீசார் அரவிந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Tags : #SCHOOLSTUDENT #COLLEGESTUDENT #CHENNAI #LOVE #KIDNAP