‘ஒருவரை ஒருவர்’... 'விட்டுக் கொடுக்காத தம்பதி'... 'காபி போட எழுப்பியபோது'... 'தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 20, 2020 03:05 PM

பாசமுள்ள மனைவி உயிர் பிரிந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலியால் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai old age couple died in same day neighbors regrets

சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோக நாராயணன் (65). இவர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி (62). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் லோக நாராயணனும் ராஜேஸ்வரியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதனால் அப்போது முதல், லோக நாராயணன் மன வேதனையடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், காலையில் கண்விழித்த லோக நாராயணன், வீட்டில் பால் காய்ச்சியுள்ளார். பின்னர், காபி போடுவதற்காக மனைவியை எழுப்பியபோது அவர் கண்விழிக்கவில்லை. மேலும், அவரின் உடலிலும் எந்தவித அசைவும் இல்லை. அதனால் லோக நாராயணன் அதிர்ச்சியில் உறைந்தார். மனைவி இறந்துவிட்டதை உணர்ந்த லோக நாராயணன் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் நேற்று திறக்கப்படவில்லை.

அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது லோக நாராயணனும், அவரின் மனைவியும் படுத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, லோக நாராயணனின் மகன்களுக்கும் மகள்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தனர். அப்போது இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்ததை அறிந்த தம்பதியின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடந்தது.

இதுகுறித்து லோக நாராயணன் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், `சென்னை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் ஊழியராக பணியாற்றிய லோக நாராயணன், மனைவி ராஜேஸ்வரி மீது அதிக பாசம் கொண்டவர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்கள். எங்கள் தெரு மக்களுக்கு முன்மாதிரியான தம்பதியாக இருவரும் வாழ்ந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்த இந்தத் தம்பதி இறப்பிலும் பிரியவில்லை. கணவன் மனைவி என்றால் இந்தத் தம்பதி போல வாழ வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறினர்.

Tags : #CHENNAI #AGE #COUPLE #DIED