'வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளி'... 'விளையாடிகிட்டு இருந்த பாப்பா'... சென்னையில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெந்நீர் வைத்து இருந்த வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சண்முகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி ஜனனி என்ற மனைவியும், சிவானிஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். மணிகண்டன் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜனனி, வீட்டில் குழந்தையை குளிக்கவைப்பதற்காக வாளியில் வெந்நீர் சுடவைத்து, அதை வராண்டாவில் வைத்து விட்டு தனது வேலைகளை பார்த்து கொண்டிருந்தார்.
குழந்தை சிவானிஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளிக்குள், குழந்தை சிவானிஸ்ரீ தவறி விழுந்து விட்டாள். இதில் குழந்தையின் மீது வெந்நீர் கொட்டியதால் உடல் வெந்து பலத்த காயம் அடைந்தாள். வீட்டிற்குள் வேலையில் இருந்த தாய், திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதையடுத்து டுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை சிவானிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள்.
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அங்கிருத்தவர்களின் கண்களை குளமாக்கியது. தவழும் வயதில் இருக்கும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
