7 மாத ஆண் குழந்தை கடத்தலில்... கர்ப்பிணி போல் இருந்த இளம் பெண்... கொடுத்த அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 21, 2020 11:07 AM

சென்னையில் 7 மாத ஆண் குழந்தையை கடத்திய இளம் பெண் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman kidnapped male baby for torture of mother in law

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே  பலூன் வியாபாரம் செய்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த  ரந்தோஷ் - ஜானி தம்பதியின் 7 மாத ஆண் குழந்தையை, இளம் பெண் ஒருவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் கடத்தினார். பின்னர் 25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையுடன் 8 நாட்களுக்குப் பின்னர் அந்த இளம் பெண்ணை பிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இளம்பெண் அரக்கோணத்தைச் சேர்ந்த ரேவதி (26) என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 3-வதாக ஆண் குழந்தை வேண்டும் என அவரது மாமியார், ரேவதிக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத ரேவதி, சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதாக பொய் சொல்லி வி்ட்டு சைதாப்பேட்டைக்கு வந்துள்ளார்.

சைதாப்பேட்டையில் தங்கியபோது வயிற்றில் துணியைக் கட்டி கர்ப்பிணி போல் நடித்துள்ளார். மெரினா கடற்கரைக்கு அடிக்கடி ரேவதி சென்றபோதுதான் ரந்தோஷ் - ஜானி தம்பதியையும், அவர்களிடம் உள்ள 7 மாத ஆண் குழந்தையையும் கவனித்துள்ளார்.  அவர்களின் குழந்தையைக் கடத்த தீர்மானித்த ரேவதி, கடந்த 13-ம் தேதி சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்றும், அதற்கு பணம் தருவார்கள் எனக் கூறி குழந்தையைக் கடத்தியுள்ளார். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையுடன் சிகிச்சைக்காக சேர்ந்து கொண்டார்.

கடந்த ஞாயிறன்று பரிசோதிக்க வந்த மருத்துவர், ரேவதியைப் பார்த்ததும் சந்தேகமடைந்தார். போலீசார் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இருக்கும் பெண் போன்று உள்ளதாக அவரது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்தபோது முதலில் ரேவதி ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் நடந்த தீவிர விசாரணையில்தான் மாமியாரின் நெருக்கடி தாங்காமல் குழந்தையைக் கடத்தியதாக ஒப்புக் கொண்டார். ரேவதி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #BABY #CHENNAI #KIDNAPPED #MARINA