VIDEO: ‘யூடியூப் பார்த்து ட்ரெய்னிங்’.. ‘புழுதி பறக்க’ கால்பந்தில் பட்டைய கிளப்பிய மாணவி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகால்பந்தாட்டத்தில் அசத்திய மாணவியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருபவர் ஹதியா ஹகீம் (17). இவர் மைதானத்தில் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கால்பந்தை ரெயின்போ கிக் (rainbow kick) செய்து முன்னங்கால்களுக்கு கொண்டு வந்து அசத்தினார். பின்னர் லாவகமாக பந்தை மேலெழுப்பி தன் முதுகில் நிறுத்தி அனைவரையும் வியக்க செய்தார். இதனை புழுதி பறக்க சுழன்று சுழன்று ட்ரோன் கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த கால்பந்தாட்ட ட்ரிக்குகளை எல்லாம் யூடியூப்பில் பார்த்து அவர் கற்றுக்கொண்டாராம். இவர் தோகாவில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்துள்ளார். புரொஃபஷனல் ஃபுட்பால் ப்ளேயர் ஆக வேண்டும் என்பது ஹதியாவின் விருப்பம். ஆனால் அவர் வசிக்கும் முக்கம் பகுதியில் பெண்களுக்குக்கான கால்பந்து க்ளப் இல்லை. மேலும் சரியான பயிற்சியாளரும் கிடைக்கவில்லை. இதனால் கால்பந்து விளையாடுவதையே அவர் நிறுத்திவிட்டார்.
இதுகுறித்து தெரிவித்த மாணவி ஹதியா, கேரளாவில் கால்பந்து விளையாட்டுக்கு மவுசு அதிகம். ஆனால் மைதானங்கள் அனைத்திலும் ஆண்களே நிரம்பி இருக்கின்றனர். பள்ளியில் கூட விளையாட்டு நேரங்களில் ஆண்கள் கால்பந்து மைதானங்களை ஆக்கிரமித்து கொள்கின்றனர். பெண்கள் கால்பந்து விளையாடுவதற்கு இங்கு வசதிகள் இல்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இதில் ஹதியாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் கால்பந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News Credits: Vikatan
