'பீர் பாட்டிலால் வந்த வினை'... 'திருவல்லிக்கேணி TO கேளம்பாக்கம்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பீர் பாட்டிலால் வந்த தகராறு, இளைஞரின் மரணம் வரை கொண்டு சென்றுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வரும் இவர், கடந்த பொங்கல் பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். போதை தலைக்கேற, கடந்த 15-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மது போதையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்ற கையிலிருந்த பீர் பாட்டிலை உடைத்து பிரேம்குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதையடுத்து ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் அவரை ஸ்டேஷன் அழைத்து வந்தனர். ஆனால் ராம்குமார் அதிக மதுபோதையில் இருந்த காரணத்தால் அவரது தந்தை குருமூர்த்தியை அழைத்து எழுதி வாங்கி மறுநாள் காலை ஆஜர் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த 19-ந் தேதி அன்று இரவு 10 மணி அளவில், ஐஸ்-அவுஸ் நடேசன் சாலையில் ராம்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், ராம்குமாரை தாங்கள் வந்த ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர். ராம்குமார் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவரது வாயை பொத்தி விட்டனர்.
பின்னர் அந்த கும்பல் ஐஸ்-அவுஸ் நடுக்குப்பம், 5-வது தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே வைத்து ராம்குமார் மீது சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ராம்குமாரின் உடலை, அவரை கடத்தி வந்த அதே ஆட்டோவில் ஏற்றி சென்ற கொலையாளிகள், ராம்குமாரின் உடலை கேளம்பாக்கம் அருகே ஒரு கல் குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளார்கள்.
இதற்கிடையே குடிபோதையில் பிரேம்குமாரை பீர் பாட்டிலால் தாக்கியதற்கு பழிக்கு பழி வாங்குவதற்கு ராம்குமாரை கடத்திச்சென்று தீர்த்துக்கட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பிரேம்குமாரையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் ஐஸ்-அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
