'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 06, 2019 07:31 PM
நெல்லை பாளையங்கோட்டையில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும்போது வ.உ.சி மைதானத்திலும் பேருந்து நிலையத்திலும் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இரு தரப்பு மாணவர்களில் ஒரு மாணவனின் காதல் விவகாரமொன்றின்போது அம்மானவனை பலர் சேர்ந்து தாக்கி டிக்டாக் வீடியோவும் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் இந்த மாணவர்கள் தற்போதைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மோதிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதனையடுத்து இவர்களது பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இம்மாணவர்களுக்கு 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராசன் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கென காவல் நிலையத்தின் முன்னால் உள்ள தடுப்பு சுவரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்கள் திருக்குறள் எழுதினர். அதுமட்டுமல்லாமல் திருக்குற எழுதிய அந்த காகிதத்தை காவல் நிலையத்தில் பதித்து தரப்படும் முத்திரையுடன் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அவர்களின் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.