'எங்கள காப்பாத்துங்க'.. முதன்முறையாக 'யூனிபார்மை' கழற்றி வைத்துவிட்டு.. போராட்டத்தில் குதித்த போலீசார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 05, 2019 02:05 PM
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சீருடையை கழற்றி வைத்துவிட்டு போலீசார் போராட்டத்தில் குதித்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி டெல்லியில் உள்ள திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் போலீசார்-வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தங்களை தாக்கியதாக வழக்கறிஞர்கள் தரப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது.மேலும் சிலர், காவல்துறையினர் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.
மேலும், நேற்றைய தினம் வக்கீல்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று காவல்துறையினருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படும், வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதி உதவியை அறிவித்தது.
இந்தநிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான போலீசார் தங்கள் சீருடையை கழட்டி வைத்துவிட்டு, சாதாரண உடையில் வந்து டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். காவல்துறையினரை காப்பாற்றுங்கள், நாங்களும் மனிதர்கள் தான் போன்ற வாசகங்ககள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் வைத்திருந்தனர். மேலும் தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடத்திய போலீசாரை கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே விட அனுமதித்தனர். இதனால் அங்கு இருந்த சாலையிலேயே அமர்ந்து போலீசார் தர்ணா நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை கமிஷனர் சிங்கால் உங்கள் கோபதாபங்கள், கோரிக்கைகளை மூத்த அதிகாரிகளிடம் சொல்கிறோம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று போராட்டம் நடத்தியவர்களிடம் கேட்டு கொண்டார்.
துணை கமிஷனரின் கோரிக்கைக்கு போராட்டம் நடத்தியவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்தநிலையில் சுதந்திர இந்தியாவில் போலீசார் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறை என காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சனம் செய்துள்ளது.