‘காட்டுவழிப்பயணம்’.. சொந்த ஊருக்கு திரும்பும்போது ‘காட்டுத்தீயில்’ சிக்கிய குடும்பம்.. குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி அருகே காட்டுத்தீயில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, கிருஷிகா விஜயமணி, மகேஷ், வஞ்சரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், ஆனந்த், மஞ்சு ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கேரள மாநிலம் இடுக்கில் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு நேற்று காலை புறப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் வர இருந்ததால் பேருந்துகள் ஏதும் போடி மெட்டுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பேத்தொட்டியில் ஊச்சலூத்து மலைப்பாதை வழியாக ராசிங்காபுரம் செல்ல திட்டமிட்டு 9 பேரும் மதியம் கிளம்பி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் 3 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மலை அடிவாரத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரவு அதிகநேரம் ஆகியதால் காட்டுத் தீயில் சிக்கியவர்களை மலையடிவாரத்துக்கு கொண்டுவர சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
