‘எல்லாம் போச்சே’.. கதறியழுத பெண்.. மளமளவென பற்றி எரிந்த தீ.. ராமநாதபுரம் அருகே சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாடனை அருகே வயலில் வைக்கப்பட்ட தீயில் சிக்கி 25 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகூரான். இவர் முருகேசன் என்பவருடன் சேர்ந்து செம்மறி ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மயிலாடுவயல் அருகே சுமார் 200 ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள வயலில் ஓலைகளால் வேயப்பட்ட இரண்டு குடுவைகளில் 25 செம்மறி ஆட்டுக்குட்டிகளை அடைத்துள்ளனர்.
அப்போது குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த வயலுக்கு அருகே உள்ள வயலில் அறுவடை செய்யப்பட்டு மிஞ்சியிருந்த கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர். காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென வயல் முழுவதும் பரவி அருகே உள்ள வயலுக்குள்ளும் எரிய தொடங்கியுள்ளது. இதில் ஓலைக் குடுவைக்குள் கிடந்த 25 ஆட்டுக்குட்டிகள் வெளியே செல்ல முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. ஆட்டுக்குட்டிகளில் அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த உரிமையாளர்கள், அனைத்துக்குட்டிகளும் தீயில் கருகி கிடந்ததைப் பார்த்து கதறி அழுதனர்.
தகவலறிந்து வந்த திருவாடானை வட்டாட்சியர் சேகர் உயிரிழந்த ஆட்டுக்குட்டிகளை பார்வையிட்டார். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் ஆட்டுக்குட்டிகள் புதைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயலில் வைக்கப்பட்ட தீயில் சிக்கி 25 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.