‘கேஸ் நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றி வந்தபோது’... ‘டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதிய லாரி’... 'பதற வைக்கும் விபத்து'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள லோடிங் பாயிண்ட்டில் இருந்து கேஸ் நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி கிளம்பியிருக்கிறது. லாரியில் சுமார் 200 சிலிண்டர்களுக்கு மேல் இருந்திருக்கின்றன. காலை 6.30 மணியளவில், இந்த லாரி ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை மீறி சாலையின் இடதுபுறத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், டிரான்ஸ்ஃபார்மரில் இருந்த ஆயில் உடைந்து சாலையில் கொட்டியது.
டிரான்ஸ்ஃபார்மர் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களும் சேதமடைந்தன. ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. லாரி மோதிய வேகத்தில் டிரான்ஸ்ஃபார்மரில் தீ பிடித்தால், லாரியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என அருகிலிருந்த பொதுமக்கள் பயத்தில் அலறியடித்தபடி ஓடினர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் காஸ் லாரியின்மீது தன்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
ஒருமணி நேரமாக நடந்த மீட்புப் பணிக்குப் பின்னர், ஆபத்து ஏதுமில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த விபத்து நடந்த டீச்சர்ஸ் காலனியை ஒட்டித்தான், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு குடியிருப்புகள் மற்றும் கடைகள் என அதிகமாக இருக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்தப் பகுதி முழுக்க பாதிக்கப்பட்டுவிடும் எனப் பெரும் பரபரப்பு உண்டானது. ஓட்டுநர் உறங்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், விசாரணைக்கு பிறகே முழுத் தகவல்கள் தெரியவரும். விபத்து குறித்து சூரம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
